பஞ்சமி நிலம்
முழு கட்டுரையை வாசிக்கவும்..
பஞ்சமி_நிலம் - பூர்வ குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை தேடி...
சொத்து என்பதில் மிக அடிப்படையானதும் அதில் முதன்மையானதும் நிலம்தான். நிலம்தான் மற்ற எல்லா பொருள் உற்பத்திக்கும் சொத்துக்களுக்கும் ஆதாரம்.
பஞ்சமி நிலம் என்றால் என்ன? :
ஆங்கிலேயர்கள் தமிழகத்தைக் கைப்பற்றியபோது நிலவிய நிலவுடைமை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நீர்ப்பாசனமுள்ள நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களிடமே குவிந்து கிடந்தன. பெரும்பான்மையான மிராசுகள் தங்கள் நிலங்களைப் பயிரிட படியாட்களாக அடிமைகளை வைத்திருந்தனர். அந்த அடிமைகள் அனைவரும் பஞ்சமர்களாக இருந்தனர்.
1891ல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரே (J.H.A.Tremen Heere) “ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட உடல்களுடனும், அழுக்கும் - கந்தலுமான அரைகுறை ஆடைகளுடனும், கல்வியறிவு ஊட்டப்படாமலும், கவனிக்கப்படாமலும், தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் சிறுகச் சிறுக தின்னப்பட்டும், பிராணிகளைப் போல வேட்டையாடப்பட்டும், மனிதாபிமானமே சிறிதும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் இந்த பஞ்சமர்கள் (பறையர்கள் ) வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்” என்று 1891-ல் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு 17 பகுதிகள் கொண்ட ஒரு அறிக்கையை சமர்பித்தார்.
அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்கள் மனிதர்களாக நடத்தப்படவும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேற்றம் பெறவும், அவர்களும் நிலவுடைமையாளர்களாக இருப்பது அவசியம் என்று அந்த அறிக்கையில் அவர் சொல்கிறார் .
அவருக்கு முன்பே சிலர் ஒடுக்கப்பட்ட பஞ்சமர்கள் குறித்து பல அறிக்கைகள், மாநாடு, பத்திரிக்கை வாயிலாக ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதில் முக்கியமானவர்கள் "திராவிட மகாஜன சபை" நிறுவனர் மற்றும் "ஒரு பைசா தமிழன்" பத்திரிக்கை ஆசிரியர் அயோத்திதாசர் பண்டிதர், கிறிஸ்துவ மிஷனரி Free of Scotland சபையை சார்ந்த திரு. ஆடம் ஆண்ட்ரு மற்றும் வெஸ்லியன் சபையை சார்ந்த திரு. வில்லியம் கௌடி இவர்கள் மூவரும் களப்பணியுடன், நாளேடுகளிலும் ஆங்கில அரசுக்கும் தொடர்ந்து எழுதி ஒடுக்கப்பட்ட விடுதலைக்காக ஒரு விவாதத்தை தொடங்கிவைத்தார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் ஆட்சியராக 1888-ல் பணியாற்றிய சி.எம். முல்லாய் என்பவரும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மிகவும் மோசமான நிலையில் வாழ்வது குறித்து அறிக்கை தயாரித்து அனுப்பியிருந்தார். ஆனால், மூத்த அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. சாதி அடுக்குநிலை காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி இந்துக்களின் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். மிராசு என்ற நிலவுடைமை முறை அதற்குக் காரணமாக இருந்தது. காணியாட்சிக்காரன் என்றும் அழைக்கப்பட்ட அப்போதைய நடைமுறை, அம்மக்களை மண்ணுக்குச் சொந்தமற்றவர்களாக விலக்கியே வைத்திருந்தது. இது எல்லாமே திரு. திரமென்ஹீர் தூண்டுதலாக இருந்தது என்று கருதலாம் .
(ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக, கலாச்சார, கல்வி, பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிக்க திரு . திரமென்ஹீர் அளித்த அறிக்கை அடிப்படையாக இருந்துவருகிறது என்கிறார் ‘பஞ்சமி நில உரிமை’ என்ற வெளியீட்டின் ஆசிரியர் வி.அலெக்ஸ். இந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஏ.சுந்தரம்) இந்த அறிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் அப்போது இருந்த பறையர்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை மிகத் தெளிவாக விளக்கியது.
அவர் அளித்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:
“பறையர்களுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை. கந்தைத் துணிகள்தான் அவர்களது ஆடைகள். தொழுநோய் போன்ற மிக மோசமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது. (மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கிவந்த பொருட்கள் போல) மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனுக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”, என்று தன் தலைமை அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தார்.
அவர் கூறுகிறார், “1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த பறையர்கள், படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள்.
மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள பறையர்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே பறையர்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம் அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் பறையர்களுக்கு கிடைக்கும். ஆனால் பறையர்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்"
யார் இந்த பஞ்சமர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள் ) ?... எப்படி? எப்போது ஒடுக்கப்பட்டனர் ?..
தற்போது, தலித்துக்கள், பட்டியல் இன மக்கள், ஆதிதிராவிடர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படும் மக்களை, ‘பஞ்சமர்கள்’ என்றும் கூறுவார்கள். வழக்கமாக நாம் மனு சாஸ்திரப்படி நினைப்பது நான்கு வர்ணங்களைத்தான். ஏதோ ஒரு கால கட்டத்தில், இந்த வர்ணங்களை ஏற்காதவர்கள் ‘ஐந்தாவது வர்ணத்தை’ உருவாக்கினார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள் என்ப்படுபவர்கள்.
பின்னர், 1891 ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விவாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
இதையடுத்து, 30.09.1892-ல் இந்த ஆய்வறிக்கையே ' செங்கல்பட்டுப் பறையரின் மக்களைப் பற்றிய குறிப்புகள்' , வருவாய்த்துறை அராசனையாக 1010/1010A வெளியட்டப்பட்டது.
இங்கிலாந்து அரசில் இந்திய விவகாரங்களுக்கான துணைச் செயலாளராகப் பொறுப்பில் இருந்த ஜார்ஜ் நத்தானியேல் கர்சன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வெளியுறவுத் துறைச் செயலரும் மதறாஸ் மாகாண அரசும் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத் தான் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது என்றாலும் நிலவுரிமைமீது ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த ஆர்வமே அப்படியொரு நிலை உருவாகிட பின்புலமாக அமைந்தது எனலாம்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்தும், பிரிட்டிஷாரின் ஏனைய காலனி நாடுகளுக்கு புலம்பெய்ர்ந்து சென்றும் ஈட்டிய சேமிப்பிலிருந்து நிலங்களை வாங்குவதிலும் அவற்றில் பயிரிடுவதிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் காட்டிய ஆர்வத்தையும், நிலத்தோடும் விவசாயத்தோடும் பிணைக்கப்பட்டதான வாழ்முறையை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருப்பதையும் கணக்கிற்கொண்டே பஞ்சமி நில உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது.
இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களை வழங்கிய போது ஒரு சில விதிமுறைகளையும் அரசு வகுத்தது. அதன்படி வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனுபவிக்க வேண்டும்.
* முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது.
* பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு பட்டியலின இன மக்களுக்கு மட்டுமே விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ செய்யலாம்.
* நிபந்தனைகளை மீறிச் செய்யப்படும் உரிமைமாற்றங்கள் சட்டப்படி செல்லாது என்ற விதிமுறைகளை விதித்தது.
(பார்வை : வருவாய்த் துறை நிலையான ஆணை 15.9 மற்றும் அரசாணை G.O.M.S. 2217 நாள் 01.10.1941).
இத்தகைய குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நிலம் வழங்கப்பட்டதால் இவை டி.சி. மற்றும் ஆதிதிராவிடர் கண்டிஷன் நிலங்கள் என்று இன்றும் வருவாய்த் துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் தன் நீண்ட விவரமான அறிக்கை யில் கடைசியாக எழுதி வைத்த கருத்துக்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. “தாழ்த்தப்பட்ட வர்களுக்கு ஓரளவு நிலமும், சொந்தமான குடி சையும், எழுதப்படிக்கத் தெரிவதும், தன் உழைப்பைத் தான் விரும்புவது போல் பயன் படுத்தும் உரிமையும் இருந்தால், அவர்கள் சுயமரியாதை உள்ளவராகி , மரியாதை எனும் திசை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். அப்படியொரு நிலை ஏற்படும்போது, அவர் கள் பட்டுழலும் ஆழ்ந்த துயரம் எப்படி என் னை எழுதிடக் கட்டாயப்படுத்தியதோ, அந்த மகிழ்ச்சியற்ற இக்கால கொடுமையை விட மாறுபட்ட எதிர்காலத்தை நோக்கி, அவர் களால் அடியெடுத்து வைக்க முடியும்.” இப்படிக் கடைசியாக உருக்கத்தோடு எழு திய அவர், சைதாப்பேட்டை கலெக்டர் அலு வலகத்தில் அமர்ந்து கையெழுத்திட்டுள்ளார். (தேதி 5.10.1891.)
சேரி நிலங்களையும் மிராசுகளே கைப்பற்றிக்கொள்வதையும், நிலங்களை ஏகபோகமாகத் தங்கள் வசத்தில் வைத்துக்கொள்வதையும், ஒடுக்கப்பட்டவர்கள் சாகுபடியாளர்களாக முடியாமல் தடுத்ததையும் திரமென்ஹீர் கடுமையாக எதிர்த்தார்.
கல்வி அறிவினாலும் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாலும் ஒடுக்கப்பட்டவர்கள் மெதுவாக அதிகாரம் பெறத் தொடங்கினர். நிலத்துக்கான அவர்களுடைய போராட்டம் 18-வது நூற்றாண்டு முதல் தொடர்கிறது. திரமென்ஹீர் அறிக்கை தந்திருக்காவிட்டால், அவர்களின் அவலநிலை வெளியுலகுக்குத் தெரிந்தே இருக்காது என்கிறார் வரலாற்று ஆசிரியர் ரூபா விஸ்வநாத். இவர் ‘The Pariah Problem: Caste, Religion and the Social in Modern India’ என்ற நூலை எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களைத் தருவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ராணுவத்திலும் ரயில்வேயிலும் பணிபுரிந்த அப்பிரிவு மக்கள்நிலங்களை வாங்கத் தொடங்கினர் என்று ஜப்பானிய அறிஞர் ஹருகா யானகிசாவா குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ரூபா. மிஷினரிகளும் பிரிட்டிஷ் அரசும் அறிக்கை தருவதற்கு முன்னதாக, 1817 முதல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் போராடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர், சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடினர். 1858-ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தையும் நடத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள நிலங்களை வகைப்படுத்தி, அடையாளம் கண்டு சர்வே செய்யும் பணியை தமிழக அரசு 1979 ஜூன் 1-ல் தொடங்கி 1987 ஏப்ரல் 30-ல் நிறைவுசெய்தது. அதனால்கூட உருப்படியான பலன் ஏற்படவில்லை. “பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மீட்டுத் தருவதற்குப் பதிலாக, அவர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி நிலங்களைக் கைப்பற்றும் சதிக்கே வழிசெய்தது பஞ்சமி நிலம் என்ற வகைப்பாடு பட்டா நிலம், புறம்போக்கு நிலம் என்றெல்லாம் பல இடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
அரசிடம் ஆவணங்கள் இல்லாததால் புள்ளிவிவரங்கள் நம்பத்தக்கதாக இல்லை. சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுக்கான டாக்டர் அம்பேத்கர் மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரும் எழுத்தாளருமான எம்.தங்கராஜ் இந்த வகையில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை விரிவாகத் தனது நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறார். ‘ஏழைகளுக்கு நில விநியோகத்தில் அரசின் தலையீடு, தமிழகப் பின்னணியில் ஆய்வு’ என்பது அவருடைய நூலின் தலைப்பு. ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலம் என்று இதுவரை அடையாளம் காணப் பட்டுள்ள மொத்த நிலத்தின் அளவு 1,16,392.40 ஏக்கர்கள். அதில் 16,018.09 ஏக்கர் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கருப்பன் ( பஞ்சமி நிலங்களை மீட்போம் இயக்கத்தைச் சார்ந்தவர் )கூறுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 2006-ல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நில நிர்வாக ஆணையர் அலுவலகம், பஞ்சமி நிலங்களின் அளவு 1,26,113 ஏக்கர்கள் என்றும் தலித் அல்லாதவர்கள் வசம் 10,619 ஏக்கர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. 1990-களில் ஒய்.அருள்தாஸ் கேட்டிருந்த கேள்விக்கு, 1,04,494.38 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அதில் 74,893 ஏக்கர்கள் தலித்துகள் வசம் இருப்பதாகவும் பதில் அளிக்கப்பட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.மெய்யார் கேட்டிருந்த கேள்விக்கு, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2015-ல் 2,843 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அவை அவர்களிடம் இல்லையென்றும் பதில் தரப்பட்டிருந்தது.
பல்வேறு தன்னார்வலர்களால் தகவல் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட குறிப்புகள்
2006-ல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நில நிர்வாக ஆணையர் அலுவலகம், பஞ்சமி நிலங்களின் அளவு 1,26,113 ஏக்கர்கள் என்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லாதவர்கள் வசம் 10,619 ஏக்கர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
1990-களில் திரு. ஒய்.அருள்தாஸ் கேட்டிருந்த கேள்விக்கு, 1,04,494.38 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அதில் 74,893 ஏக்கர்கள் ஒடுக்கப்பட்டோர் வசம் இருப்பதாகவும் பதில் அளிக்கப்பட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.மெய்யார் கேட்டிருந்த கேள்விக்கு, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2015-ல் 2,843 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அவை அவர்களிடம் இல்லையென்றும் பதில் தரப்பட்டிருந்தது.
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

0 Comments